மறையுரைச் சிந்தனை

மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 02)

ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் சீடர்களாவோம்

கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த குருவானவர், அங்கிருந்த பயணிகளுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையை அங்கிருந்தவர்கள் மிக ஆர்வமாய்க் கேட்டார்கள். குருவானவரின் போதனை முடிந்ததும், அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பயணி ஒருவர் அவரிடத்தில் வந்து, “தந்தையே உங்களுடைய போதனையை மிக அருமையாக இருந்தது” என்றார். அதற்கு குருவானவர் அவரிடத்தில், “எதை வைத்து அப்படிச் சொல்லுகிறீர்?” என்று கேட்டார். அதற்கு அந்த பயணி, “நீங்கள் கடவுளுடைய வார்த்தையை உங்களுடைய உள்ளத்திலிருந்து எடுத்துரைத்தீர்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன்” என்றார்.

இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்கின்ற யாவரும் தங்களுடைய வார்த்தைகளை அல்ல, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும், அதுதான் மனிதருடைய உள்ளத்தை ஊடுருவிப்பாயும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறார். அப்போது அவர் கூறுகின்ற அறிவுரைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்திருக்கிறது. இயேசு சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது கூறுகின்ற முதன்மையான அறிவுரை, “பயணத்திற்கு கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்பதுதான். இயேசு எதற்கு இப்படிச் சொல்லவேண்டும் என சிந்திக்கலாம். ஆனால் அதற்கு விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற கருத்து, எருசலேம் திருக்கோவிலில் நுழைகின்ற யாரும் தன்னிடம் இருக்கும் எதையும் உள்ளே எடுத்துக்கொண்டு போகக்கூடாது, வெறுமனேதான் செல்லவேண்டும். இயேசு நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆலயத்திற்கு பிரவேசிக்கின்ற திருப்பணியாகக் கருதியதால் என்னவோ, அவர் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என சொல்லியதாக அவர்கள் கூறுவார்கள்.

விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற இன்னொரு விளக்கம் நற்செய்தியைப் பணியாளர்களை, அவர்கள் எந்த ஊரில் பணிசெய்கிறார்களோ அவர்கள் பராமரித்துக்கொள்ளவேண்டும். அது அவர்களுடைய தலையாயக் கடமையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என இயேசு கூறியதாகச் சொல்வார்கள்.

அடுத்ததாக இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் என்ன செய்தியை மக்களுக்குப் போதிக்கச் சொன்னார் என சிந்தித்துப் பார்ப்பது மிகப் பொருத்தமானதாகும். அவர் அவர்களிடத்தில் போதிக்கச் சொன்ன முக்கியமான செய்தி மனமாற்றம்தான். சீடர்கள் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்னதுபோன்று மனமாற்றச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள், அவர்களை இறைவன் பக்கம் திரும்பினார்கள்.

இந்த இடத்தில் நற்செய்திப் பணி செய்யும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இருக்கின்றது. அதுதான் தங்களுடைய செய்தியை அல்ல, ஆண்டவருடைய செய்தியைப் போதிக்கவேண்டும் என்பதாகும். சீடர்கள் யாவரும் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்ன மனமாற்றச் செய்தியை மக்களுக்குப் போதித்து, அவர்கள்  மனமாறச் செய்தார்கள். அதைப் போன்று இறைவாக்குப் பணிசெய்யும் ஒவ்வொருவரும் தங்களுடைய செய்தியை அல்ல, இறைவனுடைய செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். அதுதான் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணியாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்திப் பணியாளர்கள் ஆண்டவருடைய சேதியை அறிவித்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சிந்தித்த நாம், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களுக்கு – குருக்களுக்கு – எத்தகைய மதிப்பளிக்கவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு தன்னுடைய சீடர்களை கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொன்னார். எதற்காக என்றால் அவர்கள் பணியாற்றுகின்ற இடத்தில் இருக்கும் மக்கள்தான் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில். எனவே, இறைவார்த்தையைக் கேட்கின்ற மக்கள், அதனை அவர்களுக்கு அறிவிக்க பணியாளர்களை உரிய முறையில் கவனித்துக் கொள்கிறார்களா?, அவர்களுக்குத் தகுந்த மதிப்பளிக்கிறார்களா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் கூறுவார், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாயக்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று. இயேசுவின் இவ்வார்த்தைகள், இறைவார்த்தையை – இறைவாக்கை எடுத்துச் சொல்லும் பணியாளர்களை – ஏற்றுக்கொள்ளாத மக்களுக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கின்றது.

ஆகவே, இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்திப் பணியாளர்கள் இறைவாக்கை மட்டும் எடுத்துரைப்பவர்களாக இருக்கவும், இறைவார்த்தையைக் கேட்கும் மக்கள், அதன்படி நடக்கவும், அந்த இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்தி பணியாளர்களுக்கு உரிய மதிப்புத் தரவும் ஜெபிப்போம், இவ்வாறு இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Palayamkottai, Fr. Maria Antonyraj, 2017.

மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 02)

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர் வந்தார். அவரிடம் புத்தர், “நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசிவழங்கவேண்டும் என்றால், நீ நாளை அதிகாலை 4 மணிக்குத் தனியாக வரவேண்டும்” என்றார்.

அதன்படி தேவதத்தர் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் தனியாக புத்தர் இருந்த குடிசைக்கு வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர், “நான் உன்னைத் தனியாகத்தானே வரச் சொன்னேன். எதற்காக இப்படி இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், எங்கே தனக்குப் பின்னால் யாராது இருக்கிறார்களா? என்று திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர், “நான் வெளியே உள்ள ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே இருக்கும் ஆட்களைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார்.

தேவதத்தர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்குத் உண்மை தெரிந்தது தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கிறது என்று. உடனே அவர் புத்தரிடம், “எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, மீண்டுமாக வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டுமாக புத்தரிடம் வந்தார். இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும் பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.

துறவு வாழ்வுக்கு/ பொது வாழ்வுக்கு தங்களையே அர்ப்பணிப்போர் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, தங்களையே அர்பணிக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது.

இன்று திருஅவையானது ஆண்டவராகிய இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றது. தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் அதிகாரம் 5:15  ல்  கூறுவதுபோல “வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து, உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்று இவ்விழாவானது நமக்கு அழைப்புத் தருகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி கூறுவார், “இதோ! நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரென்று தம் கோவிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்று. அதன்படி நற்செய்தி வாசகத்தில் தூய்மைச் சடங்கை நிறைவேற்றுவதற்காக குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர்கள் எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

“தலைப்பேறு அனைத்தும் எனக்கு அர்ப்பணம் செய்” (விப 13:2) என்ற ஆண்டவரின் வாக்கிற்கிணங்க இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தலைப்பேறை ஆண்டவருக்கு காணிக்கையாகச் செலுத்திவந்தார்கள். அதன்படியே இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கோவிலில் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இதன்மூலம் இயேசு இறைவனுக்குக் கையளிக்கப்பட்டவர் ஆகிறார்.

இறைவனுக்கு கையளிக்கப்படல் என்று சொல்கிறபோது நமது வாழ்க்கையை இறைவனுக்காக முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்வதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனுக்காகத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கின்றோம். குறிப்பாக கெத்சமனித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்பாக, “தந்தையே! உமக்கு விருப்பமானால் இந்தத் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்படி அல்ல; உம் விருப்பப்படி நிகழட்டும்” (லூக் 22:42) என்கிறார்.

ஆக, இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்தார் என்பதை நாம் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கின் வழியாக கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைத் திருவுளத்தின்படி வாழவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படும் அழைப்பாக இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “ஊனும் இரத்தமும்கொண்ட பிள்ளைகளைப் போல கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்குகொண்டார்; இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாக அழித்துவிட்டார்” என்று. ஆம், இயேசு கிறிஸ்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி சாவின்மீது வெற்றிகொண்டார் என்றால், அவரது சீடர்களாக இருக்கும் நாமும் தந்தையின் திருவுளத்தின்படி நடந்து  சாவின் சக்திகளான வேற்றுமை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி போன்றவற்றைக் களையவேண்டும்.

“சமூக நலன் என்ற அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டேரிப்பதே தூய துறவு” என்பார் விவேகானந்தர். கடவுளுக்கு தங்களை முழுமையாக அர்பணிப்போரும் தன்னால ஆசைகளைத் துறந்து, தன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விடுத்து, இறைவிருப்பதை நிறைவேற்றவேண்டும்.

ஆதலால் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடும் நாமும் இயேசுவைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.  – Fr. Maria Antony, Palayamkottai. 2016.

இனி எல்லாம் சுகமே!
மெட்ரோ கதவு

‘அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது’ (லூக்கா 2:24)

இன்று காலை கல்லூரிக்குச் செல்ல மெட்ரோ ஏறினேன்.

மெட்ரோ கதவு மூடியும் மெட்ரோ நகராமல் சில மணித்துளிகள் நின்றுகொண்டிருந்தது.

 

மெட்ரோவுக்கு வெளியே ப்ளாட்ஃபார்மில் டியூட்டியில் இருந்த ஒரு பெண் ஆர்மி இளவல் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். உயரம் எப்படியும் ஆறடி இரண்டு அங்குலம் இருக்கும். நல்ல முகத் தோற்றம். செந்நிற முடி. அதன் மேல் ஒரு தொப்பி. கையில் நீண்ட துப்பாக்கி. வலது தொடையில் தொங்கிக் கொண்டிருந்த மற்றொரு கைத்துப்பாக்கி. காதில் வயர்லெஸ் குச்சி. நடந்து கொண்டே இருந்தவள் சட்டென மெட்ரோ நோக்கி திரும்பினாள். மெட்ரோவின் கண்ணாடி ஜன்னலில் தன் முகம் பார்த்துக் கொண்டே கலைந்திருந்த இரண்டு முடிகளை  அப்படியே மேல்நோக்கி கோதிவிட்டு சரி செய்தாள்.

நிற்க.

மற்றவர் பார்க்குமாறு நாம் இருப்பதற்கு ரொம்பவே ஆசைப்படுகிறோம். இல்லையா?

நாளை ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளைக் கொண்டாடுகிறோம்.

உலகத்தையே மீட்க வந்த தங்கள் மகனைக் கைகளில் ஏந்திய இளம் தம்பதியினர் யோசேப்பு-மரியா, இரு மாடப்புறாக்களை மறு கையில் ஏந்தி நிற்கின்றனர்.

அலட்டிக்கொள்ளாத அர்ப்பணம் இதுதான்.

இன்று காலையிலிருந்து என் மனம் என் தேவ அழைத்தல் முகாம் நாட்களை யோசித்துக்கொண்டிருந்தது.

ஒரு மே மாதம். நானும் என் அம்மாவும் ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டு மதுரை ஞானஒளிவுபுரம் வருகிறோம். மதுரைக்கு வருவது அதுதான் முதல்முறை. முகவரி கண்டுபிடித்து பிரிட்டோ பள்ளிக்கு வந்து சேர்ந்தோம். ஏறக்குறைய 40 பேர் முகாமிற்கு வந்திருந்தார்கள். எட்டாம் வகுப்பு முடித்திருந்தேன். கலர் ஆடைகளைக் களை எடுத்து, ‘அணியலாம்’ என்று சொன்ன நான்கு ஆடைகளை மடித்து வைத்து, ஒரு தட்டு, டம்ளர் என வந்திருந்தேன். எல்லாமே புதியதாக இருந்தது. அன்றிரவு நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் மாடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் லைட் வெளிச்சம். ‘மதுரை இவ்ளோ பெரிசா!’ என்று வாய்பிளந்து நின்றேன். அருட்திரு. ஏஞ்சல்தான் இறையழைத்தல் ஊக்குநர். அவருக்கு உதவியாக அன்று அருட்சகோதரராக இருந்த மரிய லூயிஸ் இருந்தார். அந்த முதல் இரவில் நான் தூங்கவே இல்லை.

முதல் அமர்வில் எல்லாரும் வட்டமாக அமர்ந்து ஒருவர் மற்றவரை அறிமுகப்படுத்தினோம். நிறைய ஊர்களின் பெயரை அன்றுதான் கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்த ஒரே ஊர் சுந்தரநாட்சியாபுரம். அங்கிருந்து பிரின்ஸ், மலையப்பன், இஞ்ஞாசி ஆகியோர் வந்திருந்தனர். என் முதல் தோழன் திருத்துவராஜ்.

யாரை எப்படிக் கூப்பிட வேண்டும், எப்படி பாட வேண்டும், எப்படி பேச வேண்டும் – எதுவுமே தெரியாது.

நிறைய போட்டிகள் வைத்தார்கள்.

‘மறைமாவட்டம்,’ ‘திருத்தந்தை’ என பெரிய பெரிய கேள்விகள் எல்லாம் கேட்டார்கள்.

விருதுநகரா இருக்குமோ என்று பார்த்தால், விருதுநகர் மாவட்டமாம்.

பங்குத்தந்தையாக இருக்குமோ என்று பக்கத்தில் எட்டிப் பார்த்தால் அந்த மாணவன் ‘போப்’ என எழுதியிருந்தான். நானும் கொஞ்சம் இனிசியல் போட்டு, ஜி.யு. போப் என எழுதி வைத்தேன்.

கடைசி நாள்.

ஏறக்குறைய யார் செலக்ட், யார் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

‘வீட்டுக்கு ஒரே பையனை நாங்கள் எடுக்கமாட்டோம்!’ என்றார் அருட்தந்தை.

முதல் சுற்றிலேயே நான் வெளியேற்றப்பட்டேன்.

வீட்டிற்கு வந்து 15 நாட்கள் கழித்து, நான் தேர்வு செய்யப்பட்டதாக கடிதம் வந்தது. ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அந்த மஞ்சள் கலர் கார்டு இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு தீப்பெட்டி ஆபிசில் அட்டைப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்த என் அம்மாவிடம் ஓடினேன்.

அவர்களுக்கும் மகிழ்ச்சி.

இரவு என் அப்பாவிடம் சொன்னோம்.

அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

‘இந்த வயசுல இவனுக்கு துறவறம்னா என்ன தெரியும்?’ என்று மட்டும் கோபித்துக்கொண்டார்.

சரி…போகட்டும்…ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்றார்.

பெட்டி, போர்வை, புதிய யூனிஃபார்ம் என விறுவிறுப்பானது நாட்கள்.

இந்த ஒருவருடமாக நாம் கொண்டாடிய அர்ப்பண ஆண்டின் இறுதிநாளாகிய இன்று நான் என் அருள்நிலை வாழ்வு அர்ப்பணத்தை ஒருநிமிடம் எண்ணிப்பார்க்கின்றேன்.

‘தான் போவது எங்கே என்று தெரியாமலேயே புறப்பட்டுப்போனார்’ – இப்படித்தான் ஆபிராகமைப் பற்றிச் சொல்கிறார் எபிரேயர் திருமடலின் ஆசிரியர்.

எளிமை, கன்னிமை, கீழ்ப்படிதல் என்ற பெரிய பெரிய வார்த்தைகளில் இன்று வார்த்தைப்பாடுகள் எடுத்தாலும், அருள்நிலை இனியவர் தன் அழைத்தலில் நிலைக்கவும், நல்ல முறையில் வாழவும் வேண்டுமென்றால், தான் தேவ அழைத்தல் முகாமிற்கு சென்ற அந்த முதல் நாளை நினைத்துப்பார்த்தாலே போதும் என நினைக்கிறேன்.

அன்று என்னிலிருந்த யாரையும் இம்ப்ரஸ் பண்ண நினைக்காத எளிய உள்ளம், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், எதையும் எதிர்நோக்காமல், எதிர்பார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றும் என்னில் இருக்க வேண்டும் என்பதே என் செபமாக இருக்கிறது.

 

சிந்தனை

அறிமுகமான கடவுளை அறிவிப்பதே நமது பணி.

முதியவர்களாக இருந்த போதிலும் காத்திருந்து தங்களது கடமையை செய்வதைப் பார்க்கின்றோம்.

திருமுழுக்கு பெற்ற நாம் எல்லாரும் அறிவிக்க கடமைப் பெற்றிருக்கின்றோம். நம்முடைய கடமையை செய்து வருகின்றோமா?

அறிவிப்பு என்பது நன்கு அறிமுகமானால் மட்டுமே சாத்தியமானது.

இரு பெரியவர்களும் தங்களது வாழ்விலே கோவிலேயே தங்கி தங்களது நாட்களை கழித்து வந்தனர். மெசியாவுக்காக காத்திருந்தனர். நிறைய அறிந்திருந்ததால் அவர்கள் அறிவித்தார்கள்.

நாமும் அறிந்து தெரிந்து தெரிந்து கொள்வோம். அறிவிப்போம்.

இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்தல்

எருசலேம் ஆலயத்தில் குழந்தை இயேசுவைப் பெற்றோர்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறார்கள். இந்த அர்ப்பணத்தினால் தான் அவர்  பிற இனத்தாருக்கு மீட்பு அருளும் ஒளியாகவும் பிறந்த இனத்திற்கு பெருமையும் சேர்க்க முடிந்தது. இவருடைய அர்ப்பணமான செயல்கள் பலருக்கு எழுச்சியைக் கொடுக்கும் என்று முன்னறிவிக்கப்படுகிறது. அதனால்தான் இயேசு தம்மையே அனைவருடைய மீட்புக்காகக் கையளிக்கிறார். சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்கிறார். அனைவருடைய பாவங்களுக்குப் பலியாக வேறு எவற்றையும் பலி கொடுக்காமல் தம்மையே மாசற்றப் பலிப்பொருளாக ஒப்புக் கொடுக்கிறார்.

குருக்கள் காணிக்கையாக கடவுளுக்கு பல பலிகளைச் செலுத்தி வந்தனர். ஆனால் கடவுளுக்கு ஏற்புடைய பலி அவருக்கு உகந்த உள்ளமே. எனவே நாமும் பல பொருட்களைப் பலியாக ஒப்புக்கொடுப்பதைக் காட்டிலும் நம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பதே மேலானது. இறைவனுக்கும் ஏற்புடையதாகும்.

 

About amirsundar

Hello I am Catholic Diocesan Priest, serving in a parish near Tenkasi in the south down. Palayamkottai is my diocese. I love to share my views as well as very happy to help those who wish to read dailly readings. feel free to share your opinions and views. Let us hold our hands and walk in HIS vineyard. That way i love to fulfil my Priestly Motto. ' GOD IS LOVE. The one who lives in love, lives in God and God in him.'
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment