இன்றைய வாசகங்கள்

வியாழன்

முதல் வாசகம்

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19-5: 4

அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்.

தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும்.

ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 14-15bஉ. 17 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. 15bஉ அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.  

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22

அக்காலத்தில் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது.

அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை

இயேசுவின் வாழ்வின் நோக்கம் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது அன்று ஏசாயா தீர்க்கதரிசி மூலமே தெரிவிக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் முன் கூறிக்கப்பட்ட ஒன்று என்பதைத் தான் இது தெளிவுபடுத்துகின்றது.

எழுதப்பட்ட இறைவாக்கின் படியே அவர் குருடர்களுக்கு பார்வை கொடுத்து, ஒழுக்கபட்டவர்களை விடுவித்து, அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டவாறே தன் பணியை செய்தார் என நற்செய்தியாளர்கள் உறுதிப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.

நம்முடைய வாழ்வின் நோக்கமும் முன் கூறிக்கப்பட்ட ஒன்றே. நாமும் அதனை நிறைவு செய்து வாழ்வதுவே நம்முடைய வாழ்வின் தீர்க்கமான எண’ணமாக இருந்திடல் வேண்டும்.

பவுல் அடிகளார் வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றார். எபேசி 02: 10

Posted in Uncategorized | Leave a comment

இன்றைய வாசகங்கள்

திருக்காட்சி விழாவுக்குப்பின் புதன்

 

முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம்.

தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.

கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம்.

எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 திமொ 3: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! பிற இனத்தாருக்குப் பறை சாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர்.  

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52

ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார்.

அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.

அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார்.

அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, `அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர்.

உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது.

அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Posted in Uncategorized | Leave a comment

இன்றைய புனிதர்

தூய ரெய்மன்ட் (ஜனவரி 07)

 

நிகழ்வு

 

ரெய்மன்ட்டுக்கும், ஸ்பெயின் நாட்டு மன்னர் ஜேம்சுக்கும் இடையே நட்புரீதியாக நல்லதொரு உறவு நீடித்து வந்தது. ஒருவர் மற்றவர்மீது அளவுகடந்த மதிப்பினை வைத்திருந்தார்கள்.

 

இதற்கிடையில் ஒரு சமயம் மஜோர்கா என்னும் தீவிற்கு இரண்டுபேரும் நற்செய்தி அறிவிப்பதற்காகச் சென்றிருந்தார்கள்.  அங்கே சென்றதும்  ரெய்மன்ட் மிக ஆர்வத்தோடு அங்கிருந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார். ஆனால், மன்னர் ஜேம்சோ அங்கிருந்த பணிப்பெண் ஒருவருடன் தவறான வாழ்க்கை வாழத் தொடங்கினார். இது ரெய்மன்ட்டிற்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. அதனால், அவர் மன்னரைக் கடிந்துகொண்டுவிட்டு, தீவிலிருந்து புறப்பட நினைத்தார். ஒரு சாதாரண மனிதர் நம்மைக் கடிந்துகொள்வதா? என்று நினைத்த மன்னர், ரெய்மன்ட்டை அத்தீவிலிருந்து போகவிடாமல் தடுக்கப் பார்த்தார். ஆனால் ரெய்மன்ட்டோ தன்னுடைய மேலாடையைக் கழற்றி கடலில் வீசி, அதன் ஒரு நுனியை ஒரு கம்பில் மாட்டி அதனைத் தோணிபோல பயன்படுத்தி, 150 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பார்சிலோனாவை ஆறு மணி நேரத்திற்குள் கடந்தார். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போன மன்னர் தன்னுடைய தவற்றுக்காக ரெய்மன்ட்டிடம் மன்னிப்புக் கேட்டார், அது மட்டுமல்லாமல், இனிமேலும் அப்படிப்பட்ட தவறு செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார்.

 

ரெய்மன்ட் தன்னுடைய மேலாடையை தோணிபோல பயன்படுத்தி. கடல்மீது வந்ததைப் பார்த்த மக்கள் அனைவரும் அவர் உண்மையிலே இறையடியார் என்று நம்பத் தொடங்கினார்கள்.

 

 

 

வாழ்க்கை வரலாறு

 

ரெய்மன்ட், 1175 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனபோர்ட் என்னும் ஊரில் பிறந்தார். ரெய்மன்ட்டின் குடும்பம் ஆரோகன் என்னும் மன்னருக்கு நெருங்கிய உறவு. இதனால் ரெய்மன்ட் செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையப் பெற்றார். அவருடைய பெற்றோர் அவருக்கு மிக உயர்ந்த கல்வியை வழங்கினார்கள். ரெய்மன்ட்டும் தனக்கு வழங்கப்பட்ட கல்வியினால் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினார். எந்தளவுக்கு என்றால், தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே, போலன்ஜோ என்னும் இடத்தில் இருந்த பல்கலைக்கழத்தில் திருச்சபை திருச்சட்ட பாடத்திற்கு பேராசிரியராக உயர்ந்தார். அவ்வாறு அவர் பேராசிரியராக இருந்து திருச்சபையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தார்.

 

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்போது ரெய்மன்ட், ரெஜினால்டு என்பவரின் மறையுரையைக் கேட்டு, மனம் உந்தப்பட்டு தொனிக்கன் சபையில் சேர்ந்தார். அங்கேயே ஒருசில ஆண்டுகள் இருந்து தன்னுடைய பணியினைச் செய்து வந்தார். இதற்கிடையில் அப்போது இருந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரியார் ரெய்மன்ட்டைக் குறித்து கேள்விப்பட்டு, அவரை அழைத்து திருச்சபை திருச்சட்டங்களை ஒழுங்குபடுத்தி வரிசைப் படுத்தச்சொன்னார். அதுவரைக்கும் திருச்சபை சட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. ரெய்மன்ட்தான் திருச்சபை திருச்சட்டங்களை ஒன்றாகத் தொகுத்து ஐந்து தகுதிகளாக வழங்கினார். இதனால் திருத்தந்தைக்கு ரெய்மன்ட்டை மிகவும் பிடித்துப்போனது. எனவே, அவர் அவரை தெரகொனா என்னும் இடத்திற்கு பேராயராக உயர்த்தினார். ரெய்மன்ட்திற்கு அந்த உயர்ந்த பொறுப்பு பிடிக்கவே இல்லை, இதனால் ஒருசில ஆண்டுகளிலேயே அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டுமாக தொனிக்கன் சபையில் சேர்ந்து தன்னுடைய பணிகளைச் செய்து வந்தார்.

 

தொமினிக்கன் சபையும் அவரைச் சும்மா விடவில்லை, அவரை சபைத் தலைவராக உயர்த்தி அழகு பார்த்தது. அந்த பதவியும் தனக்கு வேண்டாம் என்று சொல்லி உதறித்தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஒரு சாதாரண தொனிக்கன் சபைக் குருவாகவே வாழ்ந்து வந்தார்.

 

ரெய்மன்ட் மரியன்னையின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அந்த பக்தியின் உந்துதலால், உபகார அன்னையை சபையை நிறுவினார். அதில் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறந்த விதமாய் பயிற்சி கொடுத்து, மரியன்னையின் புகழை எங்கும் பரவிச் செய்தார். இப்படி பல்வேறு விதங்களில் திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்ட ரெய்மன்ட் தன்னுடைய நூறாவது அகவையில் அதாவது 1275 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1601 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

 

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்  

 

தூய ரெய்மன்ட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 

  1. பதவிக்கு ஆசைப்படாதிருத்தல்

 

ரெய்மன்ட்டை நோக்கி எத்தனையோ உயர் பதவி தேடிவந்தன. பேராயர் பதவியும், தொமிக்கன் சபைத் தலைவர் பதவியும்கூட அவரைத் தேடி வந்தன. ஆனால், அவர் அந்தப் பதவிகள் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சிறிது காலத்திலேயே அந்தப் பதவிகளிலிருந்து விலகி ஒரு சாதாரண குருவாக இருந்து, மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்து வந்தார்.

 

ரெய்மன்ட்டிம் இருந்த தாழ்ச்சி, பதவிக்கு ஆசைப்படாத நிலை நம்மிடம் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நற்செய்தியில் வரும் செபதேயுவின் மக்களான யோவானையும் யாக்கோபையும் போன்று அந்தப் பதவி வேண்டும், இந்தப் பதவி வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதிலே நாம் சிக்கி சின்னாபின்னமாகி விடுகின்றோம். ஆண்டவர் இயேசு இறைமகனாக இருந்தபோதும் தொண்டு செய்யவே வந்தேன் என்று உரைக்கின்றார். அவருடைய வழியில் நடக்கும் நாம் எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாமல், தாழ்ச்சியோடு பணிசெயவதே சாலச் சிறந்த ஒன்றாகும்.

 

ஆகவே, தூய ரெய்மன்ட்டின் விழாவாக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்வோம், இறைவனுக்கு உகந்த வாழக்கை வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

 

–          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Posted in Uncategorized | Leave a comment

இன்றைய வாசகங்கள்

செவ்வாய்

முதல் வாசகம்

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4யb. 7-8 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4யb எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19 அல்லேலூயா, அல்லேலூயா! “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.” அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.  

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

அக்காலத்தில் இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர். அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை

அப்பம் பிட்டு பகிர்ந்து கொடுத்து தான் இறைவாக்கினர் என உணரச் செய்தார். இவ்வாறு செய்து தான் தன்நிலை உணரச் செய்திட வேண்டும் என்றில்லை.

மாறாக தன்னுடைய பரிவை அவர்களுக்கு தெளிவாக காட்டிடவே இந்த அற்புதத்தை செய்திட்டார். அவரால் எல்லாம் கூடும். பாலைநிலத்தில் மக்கள் பசியாற்ற உணவு இல்லாத நிலை, நம்பி வந்தவர்களை பட்டினியாக அனுப்ப விரும்பாத பரிவுள்ளம் அற்புதத்தை செய்கின்றது.

இன்றைக்கும் இத்தகைய பரிவுள்ளம் உள்ள யாராலும் இத்தகைய அற்புதத்தை செய்திட முடியும். இத்தகைய அற்புதம் இன்றும் நம்மிடையே அரங்கேறி வருகின்றது என்பதுவே உண்மை.

நம்முடைய குடும்பங்களில் குடும்பத்தாருக்கு சமையல் செய்துவிட்டு, சாப்பிடும் போது விருந்தினர் வந்தால் நம்முடைய தமிழர் விருந்தோம்புதல் பண்பாட்டால் நாம் விரட்டி விடுவது கிடையாது. வந்தவர்களை உபசரித்து விட்டுத் தான் வீட்டார் உணவருந்த அமர்வது இன்றும் நடைமுறையில் இருக்கின்ற பழக்கவழக்கம். எப்படி இது சாத்தியமாகின்றது என யோசிக்கும் போது என்னுடைய எளிய நம்பிக்கை சொல்லும் பதில் தாயார் சமையலில் உலையில் அரிசி களைந்து போடும் போது ஆசீர்வதித்து போடுவது பழக்கம். இதை பார்த்தவன் நான் இன்றும் நம்முடைய குடும்பங்களில் இந்த அற்புதம் அரங்கேறுகிறது என்றே நம்புகின்றேன். விசுவசிக்கின்றேன்.

Posted in Uncategorized | Leave a comment

இன்றைய வாசகங்கள்

திங்கள்

முதல் வாசகம்

தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22 – 4: 6

அன்பார்ந்தவர்களே, கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை.

கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்; ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர்.

இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எது என அறிந்து கொள்வீர்கள்.

இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க் கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.

பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்று விட்டீர்கள்; உங்களுள் இருப்பவர் உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர். அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான் உலகு சார்ந்தவற்றையே பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.

ஆனால் நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச் செவி சாய்க்கின்றனர். கடவுளைச் சாராதோர் நமக்குச் செவிசாய்ப்பதில்லை. இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 2: 7-8. 10-11 (பல்லவி: 8b)

பல்லவி: நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்.

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லை வரை உமக்கு உடைமையாக்குவேன். பல்லவி

10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். 11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.  

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17, 23-25

அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.

இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: “செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப் பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”

அதுமுதல் இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.

ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

தூண்டுதல் யாரிடமிருந்து வருகின்றது என்பதனை சோதித்தரிய அழைக்கின்றார்.

இன்றைக்கு எல்லாருக்கும் தூண்டுதல் ஆவியிடமிருந்து வருகின்றது என்று சொல்லி சபைகளை பிரிப்பதும், புதிய பிரிவினைகளை உருவாக்கி வருவதையும் பார்க்கின்றோம். கிறிஸ்துவை பிளவுபடுத்திப் பார்ப்பதையும் பார்க்கின்ற போது என்ன ஆவி எந்த ஆவி என்று கேட்டுப் பார்க்கச் சொல்லுகின்றது.

நமக்கு வருகின்ற தூண்டுதல் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வரும் தூண்டுதலும் யாரிடமிருந்து வருகின்றது என்பதனை கேட்டுப் பார்க்க வேண்டும்.

முகதாட்சணியம் பார்த்து பல நேரங்களில் மற்றவர்கள் எங்களுக்கு தூண்டுதல் அப்படி வந்தது, இப்படி வந்தது என்று சொல்லும் போது எந்த கேள்வியும் இன்றி ஏற்றுக் கொள்வது அறிவார்ந்த நிலைப்பாடா?

Posted in Uncategorized | Leave a comment

மத்தேயு 4: 12-17,23-25

திருக்காட்சிக்குப் பின் வரும் வாரம்

திங்கட்கிழமை

மத்தேயு 4: 12-17, 23-25

 

விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்த இயேசு

 

நிகழ்வு

 

          குருவானவர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய பகுதியில் மிகவும் வறிய நிலையில் இருந்த ஒரு பெண்மணிக்கு உதவலாம் என்று அந்தப் பெண்மணிக்கு வேண்டிய அரிசி, பருப்பு, காய்கறிகள்… இவற்றோடு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றார். இவர் அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றிருந்த நேரம், அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் வீட்டிற்குள் அந்தப் பெண்மணி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் கதவைத் தட்டிப்பார்த்தார். உள்ளிருந்து சத்தம் வரவில்லை. மீண்டுமாகத் தட்டிப் பாத்தார். அப்பொழுதும் சத்தம் வராததால், தான் கொண்டுவந்த பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றார் குருவானவர்.

 

இது நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து, குருவானவர் அந்தப் பெண்மணியைக் கோயிலில் சந்தித்தார். அப்படிச் சந்திக்கும்பொழுது, அந்தப் பெண்மணியிடம், “அம்மா! இரண்டு வாரங்களுக்குமுன்பு நான் உங்களைச் சந்திக்க உங்களுடைய இல்லத்திற்கு ஒருசில பொருள்களோடு வந்திருந்தேன். அப்பொழுது வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவை ஓரிரு முறை தட்டிப்பார்த்தேன். அப்படியிருந்தும், உள்ளிருந்து உள்ளேயிருந்து சத்தம் வராததால், அப்படியே திரும்பி வந்துவிட்டேன்” என்றார்.

 

குருவானவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்தப் பெண்மணி, “சுவாமி! நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகின்றபொழுது, நான் உள்ளேதான் இருந்தேன்; ஆனால், வீட்டு உரிமையாளர்தான் வாடகைப் பணம்கேட்டு, கதவைத் தட்டுகின்றார் என்று நினைத்துக்கொண்டு, கதவைத் திறக்கவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று வருத்தத்தோடு சொன்னார்.

 

இந்த நிகழ்வினைச் சுட்டிக்காட்டிப் போன்று பேசுகின்ற, மிகப்பெரிய மறையுரையாளரான சார்லஸ் ஸ்பெர்ஜன், “ஆண்டவர் இயேசு நற்செய்தி என்ற கொடையினை இலவசமாகத் தர வருகின்றார். யாரெல்லாம் அதனைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அவர் எல்லாவிதமான ஆசியையும் தருகின்றார்” என்பார். ஆம், இயேசுவின் நற்செய்தியை யாரெல்லாம் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டார்களோ, அவர்களெல்லாம் அவரிடமிருந்து ஆசியைப் பெற்றார்கள்.

 

நற்செய்தியில் இயேசு பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த நற்செய்தியைப் பணி மக்கள் நடுவில் எத்துணை முக்கியத்தும் வாய்ந்தது, அது மக்கள் நடுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

பிற இனத்து மக்களுக்கு நற்செய்தி அறிவித்த இயேசு

 

திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேள்விப்படும் இயேசு கலிலேயாவிற்கு சென்று, செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைத்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று, குடியிருக்கத் தொடங்குகின்றார். செபுலோன் நப்தலி ஆகிய பகுதிகள் பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த பகுதிகள். இப்பகுதிகள் அசிரியர்களின்  படையெடுப்பின்பொழுது, தாக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போயின (யோசு 19: 10-16, 32:39). ஆண்டவர் இயேசு அப்பகுதிகளுக்குச் சென்று, நற்செய்தியை அறிவிக்கின்றார். இதன்மூலம் இறைவாக்கினர் எசாயா உரைப்பது போன்று (எசா 9: 12) காரிருளில் நடந்த வந்த மக்களைப் போரொளி காணச் செய்கின்றார்; சாவின் நிழல் சூழ்ந்திருந்த நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதிக்கச் செய்கின்றார்.

 

 

மனமாற்றத்திற்கு அழைத்த இயேசு

 

தன் சொந்த ஊரான நாசரேத்தை விட்டு, பிற இனத்து மக்கள் நடுவில் நற்செய்திப் பணிசெய்யத் தொடங்கிய இயேசு, “மனம் மாறுங்கள், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்று போதிக்கத் தொடங்குகின்றார் .

 

ஏற்கெனவே திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்திற்கு வந்து, “மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்றுதான் (மத் 3:2) அறிவித்து வந்தார். இப்பொழுது இயேசு, திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனமாற்றச் செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கத் தொடங்குகின்றார். இயேசு அறிவித்த இந்தச்செய்தி கேட்டுப் பலர் மனம்மாறியிருக்க வேண்டும். சொல்லப்போனால், விண்ணரசில் நுழைவதற்கு மக்கள் யாவரும் மனம்மாற்றம் பெற்று, புதிய வாழ்க்கை வாழ்வது மிகவும் இன்றியமையாததாகும்.

 

இயேசு மக்களுக்கு நற்செய்தியை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து நோயாளர்களை நலப்படுத்தி, அவர்களுக்குப் புதியதொரு வாழ்வினைக் கொடுக்கின்றார். இவ்வாறு இயேசு வாழ்வின் ஊற்றாக விளங்குகின்றார். இயேசு செய்த நற்செய்திப் பணியும் நலப்படுத்தும் பணியும் மக்களுக்கு வாழ்வு கொடுத்ததுபோல, இருளில் இருந்தவர்களுக்கு ஒளி கொடுத்ததுபோல, நாமும் இருளில் இருப்பவர்களுக்கு ஒளியாக இருப்பது தேவையான ஒன்றாகும். நாம் இருளில் இருப்பவர்களுக்கு நம்முடைய வார்த்தையால், வாழ்வால் ஒளியாக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

 

சிந்தனை

 

          ‘நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு’ (1 கொரி 9: 16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவித்து உலகிற்கு ஒளியாக விளங்கியதுபோல், நாம் ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து உலகிற்கு ஒளியாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.      

–         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Posted in Uncategorized | Leave a comment

ஆண்டவரின் திருக்காட்சி

ஆண்டவரின் திருக்காட்சி

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் 

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 2: 2 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம் 

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.  

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.

ஏனெனில், `யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Posted in Uncategorized | Leave a comment

எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

 

I           எசாயா 60: 1-6

II          எபேசியர் 3: 2-3a, 5-6

III         மத்தேயு 2: 1-12

 

எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்

நிகழ்வு

 

இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒருவர் மற்றவரிடம், “கடவுள் இருக்கிறாரா?” என்றார். “ஆம். இதில் என்ன சந்தேகம்?” என்றார் மற்றவர். உடனே முதலாமவர், “கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறீர்… அப்படியானால் ஏன் அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை” என்றார். இரண்டாமவரோ, “எல்லாருக்கும் தென்படவேண்டும் என்பதற்காகவே அவர் ஒருவருக்குத் தென்படாமல் இருக்கிறார்” என்றார்.

 

“நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாக சொல்லும்” என்று முதலாமவர் கேட்டபொழுது, இரண்டாமவர் அவரைத் தன் அறைக்கு அழைத்துச்சென்று மின்விசிறியைக் காட்டி, “இந்த மின்விசிறியில் எத்தனை இறக்கைகள் உள்ளன?” என்றார். அதற்கு முதலாமவர் “மூன்று” என்று பதிலளித்தார். பின்னர் இரண்டாமவர் மின்விசிறியை சுழலவிட்டார். அது வேகமாகச் சுழன்றது. அதைப் பார்த்துவிட்டு இரண்டாமவர் முதலாமவரைப் பார்த்து, “இப்போது மின்விசிறியில் இருக்கும் இறக்கைகள் உன்னுடைய கண்களுக்குத் தெரிகின்றனவா?”என்றார். “தெரியவில்லை. ஆனால் உணரமுடிகிறது” என்றார் முதலாமவர்.

 

“மிகச் சரியாய் சொன்னீர்” என்ற இரண்டாமவர், தொடர்ந்து அவரிடம் பேச தொடங்கினார்: “மின்விசிறி சுழலாமல் இருந்தபோது, அதில் உள்ள இறக்கைகள் தெளிவாகத் தெரிந்தன என்றீர். அது சுழன்றபோது இறக்கைகள் இருப்பது உனக்குத் தெரியவில்லை என்கிறீர். இதற்குக் காரணம், மின்விசிறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான். இதுபோன்றுதான் கடவுள். கடவுள் எங்கும் சுழன்றுகொண்டே இருக்கிறார் அல்லது அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். இப்படி அவர் எங்கும் வியாபித்திருப்பதால், உனக்கும் எனக்கும் மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது.”

 

ஆம். கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார்; எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கின்றார். அதனாலேயே அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது. இன்று நாம் எல்லாருக்கும் பொதுவான கடவுளாகிய இயேசு தன்னை உலகிற்கு வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?  ஆகியவற்றைக் குறித்து இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்திய இயேசு

 

மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதை குறித்துக் வாசிக்கின்றோம். இந்தக் கீழ்த்திசை ஞானிகள் அரசர்களாக இருக்கலாம் என்பதை இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், வருகின்ற, “மன்னர் உன் உதய கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்ற இறைவார்த்தை எடுத்தியம்புதாக இருக்கிறது. ஆம் மன்னாதி மன்னரான இயேசுவைப் பார்க்க மன்னர்கள் வந்தார்கள். அவர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்தினார்.

 

லூக்கா நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி நடைபெறக்கூடிய நிகழ்வுகளில், இடையர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, அரசர்களுக்கு அல்லது ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கின்றோம். இவையெல்லாம் நமக்கு ஓர் உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கிறது. அது என்னவெனில் கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதாகும். ஆம். கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கும் சமூகத்தில் மிகவும் வறியநிலையில் இருந்த இடையர்களுக்கும் தன்னை வெளிப்படுத்திகின்றார்.

 

இதில் வேடிக்கை என்னவெனில், எங்கோ இருந்து வந்த புறவினத்து மக்களான கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவனுடைய திருக்காட்சியைக் கண்டார்கள்; ஆனால் எருசலேமில் இருந்த தலைமைக் குருக்களும் ஏரோது அரசனும் இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம், கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை நல்ல உள்ளத்தோடு தேடினார்கள். அதனால்தான் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார்கள். கொடுங்கோலன் ஏரோதைச்  சார்ந்தவர்களும் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று தேடினார்கள். அதனால் அவர்களால் இயேசுவை கண்டுகொள்ள முடியவில்லை. நாம் எத்தகைய மனநிலையோடு இயேசுவைத் தேடுகிறோம் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

பலநேரங்களில் நாம் இயேசு நல்ல மனதோடு தேடுவதில்லை; தன்னால நாட்டங்களுக்கத் தேடுகின்றோம். அதனாலேயே இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எப்பொழுது நாம் இயேசுவை நல்ல மனத்தோடு அல்லது நேர்மையான உள்ளத்தோடு தேடுகின்றோமோ (எபி 10:22) அப்பொழுது அவரைக் காண்போம் என்பது உறுதி.

 

பிற இனத்தவரும் இயேசுவின் உடன் பங்காளிகளாக முடியும்

 

ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய இரண்டாவது முக்கியமான செய்தி, பிற இனத்தவரும் இயேசுவின் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளுமாக மாறமுடியும் என்பதாகும்.

 

பிறப்பினால் இயேசு யூதர்களுக்குச் சகோதரராக இருக்கமுடியும். இத்தகைய பேறு மற்ற இனத்தவருக்குக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் நர்செஇதியிநால் இயேசுவினுடைய உடன் உரிமையாளரும் உடன் பங்காளிகளாகவும் முடியும். அதைப் புனித பவுல் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். மத்தேயு நற்செய்தி பன்னிரண்டாவது அதிகாரத்தில் கூட, இயேசு இதே செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறார். அங்கு அவர், “விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என்னுடைய தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார்” (மத் 12:50) என்பார். அப்படியானால் நாம் நற்செய்தியின் மூலம், அதாவது இயேசு கிறிஸ்துவின் மூலம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவருடைய சகோதரர் சகோதரிகளாக மாற முடியும் என்பது உறுதி.

 

ஆண்டவரைத் தேடுவோருக்குக் கிடைக்கும் ஆசி

 

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற மூன்றாவது மிக முக்கியமான செய்தி, ஆண்டவரைத் தேடுவோர்க்கு அவர் தரும் மகிழ்ச்சியாகும்.

 

கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவரைத் தேடி வந்தபோது அவரைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆம் யாரெல்லாம் ஆண்டவரைத் தேடுகிறார்களோ அதுவும் நல்ல, நேர்மையான உள்ளத்தோடு தேடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவர் மகிழ்ச்சியும் இன்னபிற ஆசியையும் தந்து, அவர்களைத் தன்னுடைய அருளால் திரும்புகிறார். இது உறுதி. திருப்பாடல் ஆசிரியர்கூட, “சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரைத் நாடுவோருக்கு நன்மையும் எதுவும் குறைவுபடாது” (திபா 34: 10) என்று கூறுவார்.

 

ஆகவே, நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று ஆண்டவரை தேடிச்செல்வோம். அதன் மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிரம்பப் பெறுவோம்.

சிந்தனை

 

“ஆண்டவரைத் தேடுங்கள்; வாழ்வீர்கள்” (ஆமோ 5:4) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆகவே நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று நல்ல மனத்தோடு ஆண்டவரை தேடிச் செல்வோம் அதன்மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிறைவாகப் பெறுவோம்.

–         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Posted in Uncategorized | Leave a comment

இன்றைய வாசகங்கள்

சனவரி 4

முதல் வாசகம்

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது.

ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார். கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2 அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

மெசியாவைக் கண்டோம்.  

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி!” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.

அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். `ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் `போதகர்’ என்பது பொருள்.

அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.

அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். `மெசியா’ என்றால் `அருள்பொழிவு பெற்றவர்’ என்பது பொருள்.

பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி `கேபா’ எனப்படுவாய்” என்றார். `கேபா’ என்றால் `பாறை’ என்பது பொருள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Posted in Uncategorized | Leave a comment

யோவான் 1: 35-42

கிறிஸ்து பிறப்புக்காலம்

சனிக்கிழமை

யோவான் 1: 35-42

 

“அவர்கள் அவரோடு தங்கினார்கள்”

 

நிகழ்வு

         

           பதினேழாம் நூற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த மெய்யியலார் பிளேஸ் பாஸ்கல் என்பவர். இறைநம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வந்த இவர் 1662 ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறந்தபொழுது இவருடைய உதவியாளர் இவருடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகித்ததை எடுத்தார். அந்தக் காகிதத்தின் மேற்பகுதியில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் 1654 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் நாள், இரவு பத்து முப்பது மணியிலிருந்து பன்னிரண்டு முப்பது மணிவரை நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு குறிப்பிடப்பட்டிருந்தது.  அதுதான் அவருக்கு ஏற்பட்ட இறையனுபவம்.

 

இறைவன்மீது நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வந்த இவரை, இவருக்கு ஏற்பட்ட இறையனுபவம் முற்றிலுமாக மாற்றியது. இதற்குப் பின்பு இவர் இறைவன்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு வாழத் தொடங்கினார்; ஆனால், இவர் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது இவர் இறந்தபின்பு இவருடைய சட்டைப்பையில் இருந்த காகிதத்தின் மூலமே உலகுக்குத் தெரிந்தது.

 

பிளேஸ் பாஸ்காலுக்கு ஏற்பட்ட இந்த இறையனுபவம் அவருடைய வாழ்வை முற்றிலுமாக மாற்றியது என்றால் அது மிகையில்லை. நற்செய்தியில் அந்திரேயாவும் அவரோடு இருந்த மற்ற  சீடரும் இறையனுபவம் பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அந்த இரண்டு சீடர்களுக்கும் ஏற்பட்ட இறையனுபவம் அவர்களுடைய வாழ்வை எப்படி மாற்றியது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான்

 

நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர் இருவரோடு நின்றுகொண்டிருக்கின்றார். இருந்த இரண்டு சீடர்களில் ஒருவர் அந்திரேயா. மற்றவர் யோவானாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. திருமுழுக்கு யோவான் தன்னுடைய இரு சீடர்களுடன் நின்றுகொண்டிருக்கையில்தான் இயேசு அந்த வழியாக நடந்து செல்கின்றார். உடனே திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்டி, தன் சீடர்கள் இருவரிடம், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்கின்றார். முன்னதாக, யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குக் கொடுக்கும்பொழுது இயேசுவை ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ (யோவா 1:29) என்று (உலகுக்குச்) சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான், இங்கு தம் இரு சீடர்களுக்கும் சுட்டிக்காட்டிகின்றார்.

 

இங்கு நாம் இரண்டு உண்மைகளை நம்முடைய மனத்தில் பதிய வைக்கவேண்டும். ஒன்று, திருமுழுக்கு யோவான் இயேசுவை, இவ்வுலகிற்கும் தம் இரு சீடர்களுக்கும் சுட்டிக்காட்டினார். இந்தத் திருமுழுக்கு யோவானைப் போன்று நாமும் இயேசுவை உலகிற்குச் சுட்டிக்காட்டவேண்டும். இரண்டு, திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணி நிறைவுபெற்றவும் (ஆண்டவருக்காக மக்களைத் தயார்செய்தது) அந்தப் பணியினை ஆண்டவரிடம் ஒப்படைத்தார். நாமும் நம்முடைய பணி நிறைவுபெற்றதும், அதனை நமக்குப் பின்வருபவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவருக்கு வழிவிடுவதே சாலச் சிறந்தது.

 

இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற இரண்டு சீடர்கள்

 

திருமுழுக்கு யோவான் தம் இரு சீடர்கள் இருவரிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டியதும், அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடருகின்றார்கள்; அவரோடு தங்குகின்றார்கள். இருவரும் இயேசுவோடு தங்கிய அனுபவம் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் அவர்கள் இருவரும் இயேசுவோடு தங்குவதற்கு முன்பாக இயேசுவை வெறும் ‘இரபி’யாகத் தான் நினைத்திருந்தார்கள்; ஆனால் அவர்கள் இருவரும் இயேசுவோடு தங்கியபின்பு,  ‘மெசியா’வாகப் பார்க்கத் தொடங்குகின்றார்கள். இதுதான் அவர்கள் இருவரும் இயேசுவோடு தங்கியதால் பெற்ற நன்மை அல்லது அனுபவமாகும். நற்செய்தியில் வருகின்ற இந்த இரண்டு சீடர்களைப் போன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவோடு தங்கி அல்லது அவரோடு ஒன்றித்திருந்து இறையனுபவம் பெறுவது மிகவும் இன்றியமையாததாகும்.

 

இறையனுபம் பெற்ற அந்திரேயா, பேதுருவை இயேசுவிடம் அழைத்து வரல்

 

ஆண்டவர் இயேசுவோடு தங்கி, இறையனுபவம் பெற்ற அந்திரேயா ‘சும்மா’ இருந்துவிடவில்லை; தன்னுடைய சகோதரர் பேதுருவிடம் சென்று, “மெசியாவைக் கண்டோம்” என்று அறிவிக்கின்றார். மட்டுமல்லாமல், அவரை இயேசுவிடம் அழைத்துக்கொண்டு வருகின்றார். அந்திரேயா செய்த இப்பணி மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு பணி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அவர், ‘தாம் இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல், தாம் பெற்ற இறையனுபத்தை பேதுருவிடம் எடுத்துரைத்து, அவரை இயேசுவிடம் அழைத்துவிடுகின்றார். ஒருவேளை அந்திரேயா மட்டும் பேதுருவிடம் இயேசுவைப் பற்றி எடுத்துரைக்காவிட்டால், திருஅவைக்கு பேதுருவைப் போன்று ஒரு தலைவர் கிடைத்திருக்கமாட்டார்.  நாமும் அந்திரேயாவைப் போன்று, பெற்ற இறையனுபவத்தைப்  பிறரோடு பகிர்ந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.

 

சிந்தனை

 

          ‘ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்’ (திபா 34:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், இயேசுவைப் பற்றிய அனுபவம் பெறுவோம். அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

–         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Posted in Uncategorized | Leave a comment